Temple Event Image

குலதெய்வ வழிபாடு

குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமால் போகக்கூடாது. குருவை மறந்தாலும், குலதெய்வத்தை மறக்க கூடாது!

குலதெய்வ வழிபாட்டு தலங்கள்:

சிதம்பரம் கபாலீஸ்வரர் தெருவில் உள்ள மடத்தை தலைமையிடமாகக் கொண்டு சைவ நெறியில் வாழ்ந்த ஆறுநாட்டு வேளாளர்கள், முகலாய, சாளுக்கிய, தெலுங்கு மன்னர்கள் தமிழகத்தின் மீது மீது தொடுத்த போரின் விளைவால் குடி பெயர்ந்து திருச்சி, திருவெள்ளறை, ஓமாந்துார், புத்தனாம்பட்டி, திண்ணனுார், சேருகுடி, போடிநாயக்கன்பட்டி, பொட்டிரெட்டிபட்டி, நத்தம், கோவில்பட்டி போன்ற பல்வேறு ஊர்களிலும் விவசாயம் செய்து வாழ்ந்தனர். பெரும்பாலான கோத்திரங்களின் குலதெய்வங்கள் ஓமாந்துார், புத்தனாம்பட்டி, அபினிமங்கலம், சணமங்கலம், தேனுார், சமயபுரம், திண்ணார், மாத்துார் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள ஊர்களிலேயே உள்ளன.

ஆனால் சமய மந்திரி மற்றும் சக்கரவர்த்தி கோத்திரத்தினருக்கு முசிறிக்கு வடக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மங்களம் கிராமத்தில் குலதெய்வக் கோயில்கள் இருக்கின்றன. சமய மந்திரி கோத்திரத்தில் மங்கலம், அபினிமங்கலம் ஆகிய இரு ஊர்களிலும் குல தெய்வ வழிபாடு நடத்தும் இருபிரிவு மக்கள் உள்ளனர். அபினிமங்கலத்தில் குல தெய்வ வழிபாடு நடத்தும் சமய மந்திரி மக்கள் “சொக்கால சமய மந்திரி" என்று அழைக்கப் பெறுகின்றனர். அபினி மங்கலத்தில் குடி கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ நல் அரவாயி அம்மன் ஆலய சொக்கால சமய மந்திரி கோத்திரத்தைச் சார்ந்த இன மக்கள் மட்டும் தனிப்பட்ட முறையில் வழிபடும் தனித்தன்மை வாய்ந்த ஆலயமாகும்.

திருச்சி மாவட்டம் முசிறிக்கு வடக்கே மங்கலத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அரவாயி அம்மன் ஆலயம் அதிகமான அளவில் உள்ள ஆறுநாட்டு வேளாளர் இன சமய மந்திரி கோத்திர மக்கள் மட்டும் வழிபடும் தனித்தன்மை வாய்ந்த ஆலயம். அன்று தமிழகத் தில் உள்ள பல இனத்தவர்களும் குல தெய்வமாக வழிபடும் மங்கலம் கிராமத்தை சார்ந்த பொது ஆலயமாகும். மங்கலம் ஸ்ரீ அரவாயி அம்மன் ஆலய திருவிழாவின் போது முதல் காப்புக் கட்டி கொள்ளும் காணியாள பூசாரியார் ஆறுநாட்டு வேளாளர் இன சமயமந்திரி கோத்திரத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கோயிலின் முதல் பூஜையும், ஆறுநாட்டு வேளாளர் இன சமயமந்திரி கோத்திரத்தினருக்கு அளிக்கப்படுகிறது.

மங்களம் ஸ்ரீ அரவாயி அம்மனுக்கு குடிபடை வழிபாடு:

மங்களம் ஸ்ரீ அரவாயி அம்மனை குலதெய்வமாக வழிபடும் சமயமந்திரி கோத்திரத்தினருக்கு வீட்டு சாமிகள் அபினிமங்கலம், புத்தனாம்பட்டி, ஓமாந்துார், நடுவலுார், திண்ணனுார், காவேரிப்பட்டி, ஆர். புதுப்பட்டி போன்ற பல ஊர்களில் உள்ளன. 1988ம் ஆண்டுக்கு முன்பு தொடர்ந்து பத்து ஆண்டுகள் அபினிமங்கலத்தை வீட்டு சாமியாக கொண்டு உள்ள குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் மங்களத்தில் குலதெய்வ பூஜையினை முதல் நாள் நடத்தி மறுநாள் புத்தானம்பட்டியில் உள்ள ஸ்ரீ தொம்ம கருப்பண்ண சுவாமி கோயிலில் உள்ள ஸ்ரீ புதுக்கருப்பண்ண சுவாமிக்கு பூஜை நடத்தி மூன்றாம் நாள் அபினிமங்கலத்தில் வீட்டு சாமிக்கு பூஜையுடன் சீர்வரிசை அனைத்தையும் செய்து வழிபட்டு சிறப்பாய் வாழ்ந்தனர். ஏனையோர் அவரவர் விருப்பப்பட்ட சமயத்தில் வழிபாடு செய்து வந்தனர்.

மகா பூஜை:

அனைத்து ஊர்களிலும் உள்ள சமயமந்திரி கோத்திரத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து வழிபாடு செய்வது என்ற முடிவின் விளைவே 1989ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற முதல் ஆண்டு குலதெய்வ சிறப்பு வழிபாடு ஆகும். முதல் ஆண்டு குல தெய்வ சிறப்பு. வழிபாட்டில் ஏற்பட்ட குறைகளை நீக்கி இரண்டாம் ஆண்டு சிறப்பு வழிபாடு 1990 ம் ஆண்டு மே திங்களில் சிறப்பாக நடைபெற்றது.

1993 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று மூன்றாம் ஆண்டு குல தெய்வ சிறப்பு வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. ஓமாந்துாரைச் சார்ந்த நம் இன சமயமந்திரி கோத்திரத்தினர் மட்டும் அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் ஓமாந்துார் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன்கோயிலிலும் ஆடி இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை மங்கலம் அருள்மிகு ஸ்ரீ அரவாயி அம்மன் கோயிலிலும், ஆடி மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையில் வீட்டு சாமிக்கோவிலான அருள்மிகு ஸ்ரீ பச்சாயி அம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

11.03.2018 அன்று நடைபெற்ற நம் பொதுக்குழுவில் புதிதாகத் தேர்ந்தெடுக் கப்பட்ட நிர்வாகக்குழுவினரால் அனைத்து ஊர்களிலும் உள்ள மங்களம் ஸ்ரீ அரவாயி அம்மனை வழிபடும் நம் இன சமய மந்திரி கோத்திரத்தினர் அனைவரையும் ஒன்று திரட்டி ஆடி 20ம் தேதி (05.08.2018) ஞாயிற்றுக்கிழமை நம் குலத்தெய்வம் மங்களம் அருள்மிகு ஸ்ரீ அரவாயி அம்மனுக்கு மகா பூஜை என்ற சிறப்பு வழிபாடு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டு நம் குல தெய்வத்தின் அருளாசியுடனும் நம் பங்காளிகளின் நல் ஆதரவுடனும் இன்றும் சி றப்பாக நடைபெறுகின்றது.

- ஆறுநாட்டு வேளாளர் இன சமய மந்திரி கோத்திரத்தார்